payanangal......

payanangal......
the messages in the path... of life...

with Muthuva tribals

with Muthuva tribals
25 old ladies willing to get free food in one single panchayat.. abononed by the community..

Sunday, March 20, 2011

கொடிது கொடிது....

இன்று காலை முதல் பேஷன்ட் (டாக்டர்கள், அப்படி தான் கூறி கொள்வோம்), ஒரு வயோதிக நண்பர். பார்கின்சோனிசம் எனும், மூளை திசுக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க கூடிய நோயினால் பாதிக்கபட்டவர். பெரிய வேடிக்கை என்னவென்றால் மனம் சோர்வடையும் போதெல்லாம் இந்த நோயின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். மனதின் கவலைகள் உடலை பாதிக்க கூடும் என்ற மருத்துவ உண்மைக்கு இந்த நோய் சாட்சியாக இருப்பதனாலேயே எனக்கு இந்த நோயாளிகளின் மேல் கூடுதல் கவனம் உண்டு. இந்த அன்பரை எனக்கு 7 வருடங்களாக தெரியும் அதாவது பார்கின்சோனிசம் அவருடைய மூளையின் கதவுகளை தட்டும் முன்பே.

இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது, இவருடைய மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய்விட்டு அதன் பின்பு வந்திருப்பார்கள் போல. நிறைய நகைகளும் பட்டுபுடவை, வேஷ்டியுமாக ஒரு செழிப்பு அவர்கள் உடையில் இருந்தது ஆனால் மிகுந்த கனிவுடன் பேசினார்கள், தங்கள் உடல் உபாதைகளை சொன்னவர்கள், என்னுடைய குடும்பம் மருத்துவர்களை கொண்டது என்பதை அறிந்து கொண்டு டாக்டர்கள் மேல் தங்களுக்கு இருக்கும் மரியாதையை சொன்னார்கள். அதற்கு பின் தாங்கள் ஒரு ஆசிரியர் குடும்பம் என்றார்கள். அதாவது இரண்டு மகன்கள், மகள், மனைவி, பெரியவர் என அனைவரும் ஆசிரியர்கள் இதை கேட்டவுடன் உங்களுக்கும் அக்குடும்பத்தின் மீது மரியாதை தோணும் தானே? எனக்கும் தோன்றிற்று, அதன் பின் அடிக்கடி அவர்களை பல்வேறு பிரச்சனைகளுக்காக சந்தித்தேன், எங்கள் ஊரில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க தொடங்கிய காலம் அது. பெரியவருக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் விலை போக கூடிய நிலம் இருப்பதாகவும், தான் தண்ணி அடிக்கும் போது அதில் தேன் ஊற்றி அடிப்பது தான் வழக்கம் என்றும் ஒரு நாள் குடித்து விட்டு வந்து சொன்னார், தனக்கு 65 வயது ஆகிவிட்டது என்றும் தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும், தன்னை வெல்ல யாரும் இல்லை என்றும் மற்றொரு நாள் சொல்லி சென்றார், பெருமிதமாகவே இருந்தார்.

நடுவில் பார்கின்சோனிசம் பாதித்தது, அப்பொழுதும் மனிதர் அசரவில்லை வயதானால் வருவது தானே இதெலாம் பிரச்சன இல்ல சார் என்பார்... 3 வருடங்களுக்கு முன்பு மிகவும் தளர்ந்து போய் இருந்தார் அவர் மனைவி துணையாக கூட்டி வந்தார், தன்னுடைய மூத்த மகன் பைக் ஆக்சிடென்ட் டில் திடீரென்று மரித்ததை சொன்னார், பாவமாக இருந்தது என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சார் பையன் திடீர்னு போய்ட்டான் சார், ரொம்ப கஷ்டமா இருக்கு சார் என்றார், நான் அவர் மனைவியிடம் அவரை எப்படியாவது தேற்றுங்கள் இல்லையென்றால் நோயின் கடுமை அதிகரிக்கும் அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை சொன்னேன். அவர் மனைவி (இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கபட்டு மார்பகத்தை இழந்தவர்) அவரை ஆதரித்து அணைத்து கூட்டி சென்றதை பார்க்கும் போது சிறிது நிம்மதியாக இருந்தது. எதிர் பார்க்காத அளவில் மிக விரைவாக அந்த பாதிப்பில் இருந்து மீண்டார், மகனின் மனைவியை டீச்சர் ட்ரைனிங் படிக்க வைத்தார் மகனின் வேலையை மருமகளுக்கு வாங்கி குடுத்தார், தன் பேத்திக்கு (இறந்த மகனின் மகளுக்கு) திருமணம் முடித்து வைத்தார், மற்றுமொரு மகனுக்கு சிங்கப்பூரில் வேலைக்கு ஏற்பாடு செய்தார், மருமகளிடம் வேலை வாங்கி கொடுத்தாயிற்று இனி உன் வாழ்க்கையை நீயே பார்த்து கொள் நீ திருமணம் முடித்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று அவர்களுடைய தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் எல்லாம் சரியாக தான் இருந்தது.

மூன்று மாதம் முன்பு மறுபடி தம்பதி சமேதராக வந்தார்கள், மகன் தங்களுக்கு சிங்கப்பூர் விசா அனுப்பி உள்ளதாகவும் சிங்கப்பூர் போவதற்கு முன் உடம்பை செக் அப் செய்ய வந்தோம் என்றார்கள் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தேன். சிங்கப்பூர் சென்றவரை இன்று காலையில் தான் மறுபடி பார்த்தேன். நடுங்கிய படி அமர்ந்தார், என்ன செய்கிறதென்று கேட்டேன்.. பதில் இல்லை ஏதோ தப்பு இருக்கிறது என்று புரிந்தது. அவர் அழுதால் என்ன சொல்வது என்று என் மனதின் மூலையில் ஒரு கேள்வியும் இருந்தது அதனாலேயே என்னால் அவர் முகம் பார்க்க முடியவில்லை, அவர் தோற்றத்தில் இருந்து மீண்டு மீண்டும் கேட்டேன், என்ன சார் உடம்புக்கு ரொம்ப முடியலையா என்று? என்னை சில நிமிடங்கள் உற்று பார்த்து விட்டு பிறகு சொன்னார் டீச்சர் என்ன விட்டு போய்ட்டா.... அதனால தண்ணி திரும்ப அடிக்கிறேன் உடம்புக்கு முடியல என்றார்.. சத்தியமாக அந்த அதிர்ச்சியை என்னாலே உள்வாங்கி கொள்ள முடியவில்லை 7 வருடங்களாக அவரை ஆட்கொண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்த பார்கின்சோனிசம் நோய் இப்பொழுது 2 மாதங்களில் அவரை முழுமையாக சேத படுத்த ஆரம்பித்திருப்பது தெரிந்தது, தொடர்ச்சியாக பேச இயலவில்லை, நேராக நிற்க இயலவில்லை.. நடுங்காமல், தடுமாறாமல் நடக்க இயலவில்லை அனைத்தும் 2 மாதங்களில், குடி பழக்கமும் தனிமையும் இனி இவரை என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை...

மனைவி இருக்கும் போது தெரியல சார்.... பேப்பர் எடுத்து குடுக்க ஆள் இல்லை, தண்ணி குடுக்க ஆள் இல்லை, தனியா இருக்கேன் டாக்டர்... மக கல்யாணம் பண்ணி போய்ட்டா , மருமகளுக்கு இப்ப என்ன பாக்க முடியாது, மகன் சிங்கப்பூர்ல இருக்கான்... என்ன பண்றதுன்னு தெரியல என்றார்... எனக்கு தெரிந்த ஆறுதல் வார்த்தைகளை சொன்னேன்... இவரால் இனி நடக்க இயலாது.. இவருக்கு கவலை அதிகமாக ஆக இவர் நோய் இவரை மெல்ல ஆட்கொண்டு ஆள் கொல்லும் அதனால் இவரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று யாரிடம் இப்போ நான் சொல்வது?? நல்ல வேலை அவர் அழவில்லை, நானும் உடன் அழுது விடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ?? அவர் ஏன் அழ வில்லை? மீண்டும் வருவாரா? அனைவரும் டீச்சர் என்றாரே... முதுமை நமக்கும் வரும் என்று டீச்சர்களுக்கு யார் பாடம் எடுப்பது?..... இவரால் இனி இது போல் மீண்டும் ஒரு முறை என் மருத்துவமனைக்கு வர இயலுமா தெரியவில்லை.. அவர் நிலையும் மனமும் அறிந்தவன் என்ற முறையில் இவருடைய விரக்தி என்ன செய்ய தூண்டுமோ என்ற எண்ணத்தில் எனக்கு அழுகை வருகிறது.........

No comments:

Post a Comment